கடந்த 15 நாட்கள் தருமமிகு சென்னை பட்ட பாடு கண்ட பிறகு தலைப்பை - இந்த பதிவிற்கு மட்டுமாவது ... "எங்கெங்கு காணினும் "தண்ணீர்"-தான்டா என்று தலைப்பிட தோன்றுகிறது.
ஆத்மிக விஷயத்தை பேச விழைந்த நான் மானுடம் (மட்டுமா ?) பட்ட அல்லல்களையும் இன்னல்களையும் எழுதுவது எவ்வகையிலும் இந்த தலைப்பிற்கு வேறுபாடாக இருக்காது. நமது அற்புதமான கலாசாரம் தண்ணீரையும் பஞ்ச பூதத்தில் ஒன்றாக வரித்தது தற்செயலா என்ன ? இன்று உமக்கு விதித்தது இதுதான்...
மேலே படியுங்கள்....
இந்த கால தமிழகம் அடிவாங்கிய சமீபத்திய "காற்றழுத்த தாழ்வு மண்டலம்" என்று அலங்காரமாக அழைக்கப்பட்ட - ஆனால் - "பெருமழை சேதமாக" பரிணமித்த அந்த சோகத்தை சற்றே புறத்தே ஒதுக்கி வைப்போம்.
சில நூற்றாண்டுகள் முன் நமது மாமன்னர்கள் தங்கள் இடுப்பில் கை கொடுத்து ஒய்யாரமாய் நின்று மிடுக்காக " மந்திரியாரே... மாதம் மும்மாரி பொழிகிறதா ?" என்று வினவுவதை நமது இயல் இசை நாடகத்தில் கண்டோம் - ஞாபகம் இருக்கிறதா ?
"பொழிகிறது தானே ? பொய்த்துவிடவில்லையே ?" என்ற ஆதுரமாகவே அதை அர்த்தப்படுத்திவிட்டோம். "மும்மாரி மட்டும் தானே பொழிகிறது...? விளாசி தள்ளிவிடவில்லையே ? " என்ற பதைபதைப்பை நாம் உணரத் தவறியதில் தான் நம் தப்பாட்டம் ஆரம்பிக்கிறது. (மன்னர் தானே தன் அரண்மனை ஜன்னல் வழியாக பார்த்து தெரிந்து கொள்ளலாமே ? என்று குதர்க்கம் இங்கே தேவையில்லை. எமது "சக்தி" விரயமாவதில் நமக்குஅவ்வளவாக ஒப்பில்லை.)
பிரபஞ்ச சக்தியாக பஞ்ச பூதங்கள் வரிக்கப்பட்டு வழிப்பட்ட செயல் அவற்றின் வீரியத்தை உணர்ந்ததால்... அவற்றை வழிபடுவத்தை தவிர நமக்கு வேறு வழி இல்லாததால். இந்த வார ஆனந்த விகடன்-ல் சில அற்புதமான கட்டுரைகள் - "இயற்கை சீற்றத்தைப்பற்றியது - தவற விடாதீர்கள். அதில் ஒன்று பிற நாடுகளில் வெள்ள அபாயத்தை தடுக்க அவர்கள் செய்த சாதுர்யம் பற்றியது. இது விஷயமான என் மன ஓட்டத்தை பின்னர் சொல்கிறேன்....
ஒரு அதிசயம் போல் என் இந்த தொடரின் முக்கிய வார்த்தையான "சக்தி" யானது அதே ஆனந்த விகடனின் (16 Dec 2015) தலையங்கத்தில் பல முறை உச்சரிக்கப்படுகிறது. - இந்த பெருமழை மூலம் பல சக்திகளை நாம் தெரிந்து கொண்டோமாம்... இளைஞர் சக்தி, இணைய சக்தி சமூக ஊடகத்தின் சக்தி......!! அடடா... அடடா.... இதைத் தான் நானும் விம்மி வெடித்து சொல்லிக்கொண்டு இருக்கிறேன்..."எங்கெங்கு காணினும் சக்தியடா" என்று. நான் தனியன் இல்லை என்று கண்டு கொண்டதில் மீண்டும் ஒரு முறை ஆசுவாசம்.
(இந்த பத்திரிகை குழுமத்திற்கு "சக்தி விகடன்" என்றொரு பத்திரிகையும் இருக்கிறது. என்னவோ அது பற்றி ஞாபம் வருகிறது....ஒரு வேலை விளம்பர யுக்தியோ ?)
இது முக்கியமான ரகசியம்.- பிரபஞ்ச ரகசியங்கள் அல்லது சக்தி விளையாட்டுகள் எல்லாமே எப்போதும் தரிசிக்க ஆவலாக, பரிதவித்து இருக்கிறவர்களுக்கு மட்டும்தான். வெறும் ஆராய்ச்சி மனநிலை ஒரு பிம்பத்தை எப்போதாவது தரலாம் - அடிக்கடி நிகழக்கூடிய பாக்கியம் எனக்கும் என்னைப் போல மெய்யன்பர்களுக்கும் தான்.
இப்போது, இந்த தமிழக "காற்றழுத்த தாழ்வு மண்டலம்" பற்றியும் "பெருமழை" பற்றியும் "வெள்ளச்சேதம்" பற்றியும் கொஞ்சம் கதைப்போம். முதல் இரண்டையும் நம்மால் தவிர்க்க முடியுமா தெரியவில்லை. இன்னமும் கொஞ்சம் மனித எத்தனத்தால் "வெள்ளச்சேதம்" குறைக்கப்பட்டு இருக்க முடியும். பெருஞ்செலவு செய்து உருவாக்கப்பட்ட அந்த மற்ற தேசங்களின் தடுப்பு சக்திகளுக்கு ஏதோ ஒரு அளவில் ஒரு வரையறை இருக்கத்தான் செய்யும்.
அரசாங்கத்தை தூக்கி நிறுத்த வெள்ளத்தில் இறந்த அந்த அரசாங்க ஊழியர் , அவர் போல பெயர் தெரியாத வேறு பலர் - குறைந்த அளவில் இருந்தாலும், அரசின் கையாலாகாத தன்மையை தூற்றி காரி உமிழும் அந்த பெரிய கூட்டத்தின் கூச்சல் மிக பலத்து இருந்தாலும் - நான் இவர்கள் நடுவின் ஊடே சக்தியையே தரிசிக்கிறேன்.
ஆம்...என் அகத்தில் தண்ணீர் இல்லை. என் குடும்பம் சிற்சில ச்ரமங்கள் (உதாரணம், மின்சாரம், கைபேசி செயலிழக்கம் , ஆவின் பால் தட்டுப்பாடு) மட்டுமே இந்த ஊழிக்கூத்தில் கண்டோம். இந்த நிமிஷம்கூட , வீடுகள் தண்ணீரிலும் சாக்கடையிலும் நிரம்பி இருக்க, சொந்த நாட்டிலேயே அகதிகளாக பலர் தமிழகத்தில் இருக்கையில், மிக சௌகரியமாக இருக்கையில் அமர்ந்து, மின்சார விசிறியின் அடியில் குஷாலாக நான் இருப்பது எனக்கு கொஞ்சமும் நெருடல் இல்லை.
சக்தியின் விளையாட்டுகளில் நாம் அறுதியிட்ட நீதிகளும் நேர்மைகளும் உள்ளங்கையில் நெல்லிக்கனி போல் எல்லா நேரமும் புலப்படுவது இல்லை. ஆனால் - கொஞ்சம் போரடிக்கும் - நமது நியாயங்களை விட சக்தியின் தாண்டவத்தில் மர்மங்களும் சுவாரஸ்யங்களும் சற்றே அதிகம்.
வருணபகவானை அவன் வீர்யத்தை மேலும் ஒரு முறை துதிப்போம். பஞ்ச பூதங்களில் மற்றவற்றையும் மனத்தில் இருத்தி தியானித்து , சக்தியின் விஸ்வரூபத்தின் அங்கங்களை நம்மால் முடிந்த அளவு தொழுவோம்.
வேறென்ன செய்ய....?
Baba Magic என்று கேள்விப்பட்டு இருக்கிறீர்களா ?
அடுத்த பதிவில் அது என் வாழ்கையை தொட்ட விதத்தை நான் முடிந்த வரை தொட்டு காட்டுகிறேன்.
......... வளரும்