Saturday, April 26, 2014

Sweet Nothings.......

A small speech which I prepared for Madhoo kutti..

நான் நாது ராம் கோட்சே - ஆக இருந்து இருந்தால் 

நான் ஒரு உண்மையான இந்து. இந்துத்துவத்தை பரப்பி சிறப்பிக்கும் ஒரு இயக்கத்திற்கு உண்மையாக உழைக்கும் ஒரு தொண்டன். இந்தியாவில் அந்த காலத்தில் இருந்த மிதவாத அரசியல் பற்றி எங்கள் இயக்கத்திற்கு கருத்து வேறுபாடு உண்டு. 

என்ன செய்வது - பெருவாரியான மக்களை ஈர்ப்பது மிதவாதம் தானே.....? 

அதுவும் அவர்கள் கொண்டாடும் அவர்களின் அரிய தன்னிகரற்ற தலைவர் - மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி எங்களுக்கு - அதாவது எங்கள் இயக்கத்திற்கு மிகப்பெரிய எதிரியாகவே  போய்விட்டார். 

நீங்களே சொல்லுங்கள்.....பல இனங்களும் மதங்களும் வாழும் ஒரு சமூகத்திற்கு பெரும்பான்மையாக வாழும் சமூகத்தின் விருப்பு வெறுப்புகளை ஒட்டித்தானே ஒரு அரசாங்கம் முடிவுகளை எடுக்க முடியும் ? ஆனால் இந்த அரையாடை உடுத்திய தலைவருக்கு சிறுபான்மையான மக்கள் பற்றிதான் எப்போதும் கவனம்....பாசம்......

எங்கள் இயக்கத்திற்கு ஒரு விரோதியாகவே மாறிப்போனார். அதன் விளைவுதான் இன்று நானும் உங்களுக்கு ஒரு பரிச்சயமான வரலாற்று பிரதிநிதியாக மாறிப்போனேன். உங்களுக்கு ஒரு தன்னிலை விளக்கம் அளிக்கவே இன்று மீண்டு எழுந்து இருக்கிறேன்.

உங்களுக்கு தெரியுமா ? நான் உங்களைப் போலவே ஆசாபாசங்களும் நுண்ணிய உணர்வுகளையும் கொண்ட ஒரு சாதாரண இளைஞன். இந்தியாவைப் பற்றி கனவுகளையும் நமது மக்கள் மேன்மை பற்றி  பெருமையும் கொண்டவன்தான். ஏன்.....இந்த காந்தி பற்றியும் பல விஷயங்களிலும் எனக்கு மதிப்பு உண்டு. 

அவரது பரந்த பார்வையும் அதே நேரத்தில் அவருக்கு இருந்த மனத்தின் ஈரம் பற்றியும் நான் அறிவேன். சில துரதிர்ஷ்டமான சம்பவங்களால் இஸ்லாமியர் மீது சிறிது வெறுப்பு ஏற்பட்டது. இயக்கத்தின் போதனைகள் என் மனத்தை வெறுப்பு மிக்கதாக ஆக்கி விட்டது. 

பெருவாரியான மக்களை ஒட்டியே எல்லா அரசாங்க முடிவுகளும் எடுக்கப்பட்டால் சிறுபான்மையர் மகிழ்ச்சியாக, அமைதியாக எப்படி வாழ முடியும் ? இந்த சிறிய உண்மை எனக்கு புரியாமல் போய்விட்டதால் துப்பாக்கியை நாடி விட்டேன். இந்த தேசத்தின் படிப்பறிவில்லாத பல குடி மக்கள் தெய்வமாக போற்றி புகழும் ஒரு வாழும் ஒரு கர்ம யோகியை தோட்டாவுக்கு இரையாக்கி  விட்டேன். 

ஆம்.... காலம் பின்னோக்கிச் சென்று மீண்டும் வாழ்வை எனக்கு பிடித்த விதமாக வாழ எனக்கு வழி கிடைத்தால், நான் மகாத்மாவின் தொண்டராகவே வாழ்ந்து இருப்பேன். அந்த மகான் தன்  முதிய வயதிலும் மாறாத புன்னகையோடும் எல்லையற்ற கருணையோடும் எல்லோரையும் ஆசிர்வதித்து கொண்டு இன்னும் சில வருடங்கள் வாழ்ந்து இருப்பார்.

வந்தே மாதரம்